vendredi 26 octobre 2007

ஏன் உன்னை மட்டும்?



இன்னொரு தடவை
"ஏன் என்னை காதலித்தாய்" என்று கேட்டு
என்னை கவிஞன் ஆக்காதே






வார்த்தைகளால் கொட்டுவதோ
நான் உணர்வதில் பாதிதான்
மீதி சொல்லத்தெரியவில்லை
நீயே வந்து உணர்ந்து கொள்
நானாய்!





திரைப்படம் பார்க்கையில்
துளிர் விட்ட விழிநீர்
பேருந்து ஜன்னலில்
ரசனையோடு உன் முகம்
இடறிவிழுந்த போது
இக்கட்டில் கூட வரைந்த உன் நாணம்
இசையோடு சேர்ந்து
இணையும் உந்தன் கானம்
புன்சிரிப்பால் பரவி
பேசுகின்ற இயல்பு
இப்படி சிறு சிறு காரணங்களே
நான் உன்னை மட்டும் நேசிப்பதற்கு


திருடித் தொலைக்காதே


தொலைத்தது கிடைக்கவில்லை
இனியும் தொலைத்துத் தேட விரும்பவில்லை
ஆனால் நீயோ உன்னைத் தொலைத்தும் கூட
திருட நினைக்கிறாய்

mardi 23 octobre 2007

டேய் பையா

ஆரம்பத்தில எங்களைப் பார்க்க வந்திருக்கும் புதிய பூவென்று தான் உன்னை நினைச்சோம்

உன் சின்ன விழிகள் எங்களை கூர்ந்து பர்த்தது இன்னமும் நினைவிருக்கு



உன் பிஞ்சு கையில் சிக்கித்தவித்த எம் ஒற்றைவிரல்


உன் இமைகளின் ஒவ்வொரு அசைவும்


தூக்கத்தில் கூட எம்மை கொள்ளை கொண்ட உன் குறுஞ்சிரிப்பு


எத்தனை தடவை கண்கொட்டாமல் பார்த்திருப்போம்


நீதானே என்று தாங்கிகொண்ட உன் சின்னச் சின்ன குறும்புகள்


உன் மாற்றங்களை எப்படி எப்படியோ ரசித்தோம்


உன் முதல் பார்வை


முதல் தீண்டல்


முதல் சிரிப்பு


முதல் அழுகை



முதல் அடிவைத்த பாதங்கள்



முதல் முத்தம்


முதல் வார்த்தை
"அம்மா"
எத்தனயோ தடவை ஏங்க வைத்தாய்
சிரிக்க வைத்தாய்
டேய் பையா உனக்கு 60 ஆனலும்கூட
எமக்கு நீ இன்னமும் செல்ல குழந்தைதான்
உன்னோடிருப்பதே எமக்கு உலகமாய் போய்விட்டது

lundi 22 octobre 2007

கண்ணீரில் கரைபவன்


இவன் இதயத்தின் குமுறல்களை
இதுவரை எவர் அறிந்திருப்பார்
அவனது தலயணைக்கு மட்டும் தெரிந்திருக்கும்
அவனோடு சேர்ந்து நனைந்த நாட்களை
ஆறுதல் சொல்லா அம்மாவாய் எவரும் இல்லை
கனவுகள் மட்டும் அவன் கண்ணீர் துடைக்கும்
இசை சேர்ந்த இரவுகள் இன்னல்களை அகற்ற
நிஜத்தில் கண்ணீரில் கரைபவன்
நித்திரையிலாவது நிம்மதியால் நிறையட்டும்

samedi 20 octobre 2007

மடல்


உன் மடல் கிடைத்ததும்
உயிரே திரும்பி வந்ததாய் ஓர் உணர்வு
அதில் ஒவ்வொரு எழுத்திலும்
உன் உருவங்கள், உன் பாவனைகள்
முத்திரைக்குப் பதிலாக
உன் இதயத்தை ஒட்டி வைத்தாயா?

vendredi 19 octobre 2007

தாகம்


பூமியின் தாகம் தீர்த்தது
பூவின் கண்ணீர்த்துளி


வந்துவிடு


மறந்து விடு
என்னையும் உன்னையும் தவிர
உலகத்தில் அனைத்தையும் மறந்து விடு
ஒரு துளி நிமிடங்கள்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாழ்ந்தாவது சாவோம்
பாரமான இதயத்திற்கு
விடுமுறை நீயும் கொடுத்து விடு
இயல்பாக என்னை
இன்றாவது நெருங்கி விடு
எத்தனையோ காலங்கள்
இந்த நிமிடத்திற்காய்
காத்திருந்தேன்
எதிர்பார்த்திருந்தேன்
இப்பொழுது மட்டும்
எனக்கே எனக்காய் வாழ்ந்திடேன்!

lundi 15 octobre 2007

என் பேருந்துப் பயணம்



















கண் தெரிந்தும் கண்ணாடி போட்டு கவர விரும்பும் ஓர் அழகன்
கண்ணிழந்தும் இருளில் கூட ஒளி தேடும் ஓர் மனிதன்
இயலாதவளுக்கு துணையாய்ச் செல்லும் ஈடில்லா ஒர் தோழி
பார்வையாலே பேசிக்கொள்ளும் நரைவிழுந்த காதலர்கள்
தொலைத்த வாழ்வை தொலைபேசியில் தேடுகின்ற ஓர் இளைஞன்
இப்படி இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள்
இவர்களுக்காகவே இன்னும் தொடர வேண்டும்
என் பேருந்துப் பயணம்

முதல் கவிதை


அண்ணாவின் பார்வைக்காய்
அறியாத பெயர் போட்டு
அந்நியரின் கவிதையென
அறிவித்த சிறு பொய்
என் முதல் கவிதை

vendredi 12 octobre 2007

இது மலர்கள் தூங்கும் நேரமா
























இது மலர்கள் தூங்கும் நேரமா
இந்த நிலவு தூங்கும் நேராமா
என் இமைகளின் துடிப்பு
உன் இரவினைத் தொலைக்குமா
என் இதழ்களின் பாடலோ
உன் கனவினைத் தீண்டுமா
அதிகாலை விடியும் வரை
அசையாது பார்த்திருப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
உன் கனவோடு சேர்ந்திருப்பேன்

காற்றோடு உன் கூந்தல்
கலையத்தான் விடுவேனா
கண்ணோடு உன் இமையும்
பிரியத்தான் விடுவேனா
இரவிரவாய் உனை நானும்
இமைக்காமல் ரசித்திருப்பேன்
இதயத்தின் ஓசைகளை
உயிர்வரையில் கேட்டிருப்பேன்

என் தூக்கம் தொலைத்து நானோ
உன் விரல்கள் வருடிடுவேன்
தொல்லை மறந்து நீ தூங்க
தோளாக நான் இருப்பேன்
சுவாசிக்க நீ மறந்தால்
காற்றோடு நான் கலப்பேன்
அழகான உன் முகத்தை
அழியாமல் பார்த்திருப்பேன்

mercredi 10 octobre 2007

ஒரு வார்த்தைக் கவிதை






உன் பெயரை தெரிந்த நாளில் இருந்து
ஒவ்வொரு நாளும் உச்சரித்தேன்
அந்த ஒரு வார்த்தைக் கவிதையை

dimanche 7 octobre 2007

காதல் என்பது












காதல் என்பது...


இரவினில் நேரம் பார்ப்பது...
இசையினில் கனவு காண்பது...

தனிமையில் பேசி ரசிப்பது...
தனக்குள்ளே நினைத்து சிரிப்பது...

காத்திருந்து கரைந்தே போவது...
குறைகளை ஏற்க மறுப்பது...
பார்வையால் பேசிக்கொள்வது...
பார்த்ததும் பசி மறப்பது...

கவிதைகள் எழுதவைப்பது...
கண்ணாடி முன் காலம் போவது...

நிலவினில் முகம் தெரிவது...
நினைவுகளே வாழச்செய்வது...

samedi 6 octobre 2007

நீ... நானாய்



பேருந்தில் ஜன்னலாய்
பக்கத்தில் தோழியாய்
இரவினில் போர்வையாய்
மழையினில் குடையாய்
தனிமையில் துணையாய்
என்னோடு எப்பொழுதும்
நீ... நானாய்!


இந்த ஒரு பார்வைக்கு
அகராதியில் கூட இல்லை

இவ்வளவு அர்த்தங்கள்






நாம் பேசுவது தீர்ந்த பின்னும்
நம் மௌனங்கள் தொடர்கின்றன



கனவுகளில் வாழ்ந்தவன்
என் கண்முன்னே நின்ற போது
நிஜங்களையும் நம்பாமல்
நேரிலேயே கனவு கண்டேன்




இந்த உலகத்தை பார்த்த போதல்ல
உன்னைப் பார்த்த போது தான்
-நான் அறிந்தேன்
கண்களின் அருமையை