mardi 26 juin 2007

இப்படியும் கூட

உன் கண்ணீர்த்துளிகளை உன் இமையே விழாது தடுக்கும் போது
எப்போதும் உனைத்தாங்க விரும்பும் நான் அவற்றைச் சிந்த விடுவேனா?

நிஜங்களே சிலவேளை உடைந்து போகையில்
நிழல்களை எப்படி நம்புவது?

அம்மா, உன்னால் இன்று இங்கே...

நிலா முற்றத்துக்காக பதிவேட்டுப்பகுதியில் எழுதியது...





வணக்கம் உறவுகளே. எல்லோரும் நலந்தானா ? இங்கே பதிவேடு என்ற பகுதியை வாசித்தபோது எனக்கும் ஏதோ ஒரு சிறு ஆசை நானும் ஏதாவது இங்கு எழுதணும் என்று. எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் சிறு கதை ஒன்று இருக்கு.அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்து இருக்கேன். என்னையும் இணைப்பீர்கள் என்று எதிர்பார்த்து இதோ அதை எழுதுகிறேன்.

அதற்கு முன்னாடி சிறு விடயம் ஒன்று ; இங்கு நான் எழுதுவது என்னில் ஞாபகம் இருக்கும் சில காட்சிகளை மட்டுமே. மறந்ததை எவ்வளவோ தேடிப்பார்த்தாலும் ஞாபகத்துக்கு வர மறுக்கின்றன.

இருந்தாலும் சிலவற்றை ஒன்றுகூட்டி இங்கே எழுதுகிறேன்.

எனக்கு ஒரே ஒரு அண்ணா, குடும்பம் என்று சொன்னால் அப்பாவும் அம்மாவும் தான். உங்களைப்போலவே நானும் பெருங்குழப்படிகள் செய்து சிறு திட்டுக்கள், அடிகள் நிறைய வாங்கியிருக்கேன். அதை இப்பொழுது நினைத்தால் கூட சிரிப்புவந்து எட்டிப்பார்க்கும்.
இப்படி சாதரணமாய் போய்கிட்டு இருந்த நம் வாழ்வில் ஒரு திருப்பம்...

எனக்கு அப்போது 4 வயது இருக்கும். ஒரு நாள் நாங்கள் எல்லோரும் ஒரு திருமண வீட்டுக்குச் செல்வதற்காய் ஆயத்தம் பண்ணிக்கிட்டு இருந்தோம். அந்த வயசில் கூட நான் எத்தனை தடவை என்னைக் கண்ணாடியில் பார்த்தேன். ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யும் போதும் ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் பார்த்து ரசித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்படியே அம்மா எல்லோருக்கும் ஆயத்தம் படுத்த உதவி செய்திட்டு அவங்க தனக்கு ஒன்றும் பண்ணவில்லை. அதன் பிறகு ந்டந்தது ஞாபகம் இல்லை. ஆனால் அம்மா தான் திருமணத்துக்கு வரவில்லை என்றும் தன்னை விட்டுவிட்டு எங்களைப் போக சொன்னா. அப்பா எவ்வளவு வற்புறுத்தியும் அவங்க வர விரும்பவில்லை.பிறகு திருமணத்தில் எல்லோரையும் சந்தித்தேன். நன்றாக நினைவிருக்கிறது. பாட்டியையும் மற்றவங்களையும் பார்த்தேன். திருமணம் இனிதே நிறைவேற நானும் என் அண்ணாவும் என் அப்பாவும் மோட்டார் வண்டியில் வீடு திரும்பினோம். அங்கு வீட்டில் அம்மா இல்லை. வீடு முழுவதும் பூட்டி இருந்தது. அப்பா சொன்னார் பக்கத்துவீட்டுக்கு எங்கேனும் போய் இருக்கலாம் பார்த்துவிட்டு வாங்கோ என்று. நானும் என் அண்ணாவும் எல்லோர் வீட்டிலும் ஓடிஓடிச் சென்று பார்த்தது இன்னமும் கண்முன்னே தெரிகிறது. தேடியும் ஓடியும் பார்த்துப் பிரஜோனம் இல்லை.
அப்பாவும் அவர் பங்குக்கு அம்மா எங்கு எல்லாம் வழமையாக போவாரோ அங்கு சென்று தேடிக் களைத்து தோல்வியோடு வந்தார்..நேரம் போகப் போக எங்கள் முகத்திலும் இருள் சூழ்ந்து கொண்டது. கதவுகள், ஜன்னல்கள் முற்றுமாகச் சாத்தப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்கவும் வழியில்லை. அப்பாவிடம் வேறு சாவி இருக்கவில்லை. அம்மா வீட்டில் தானே இருக்கிறார் என்று அங்கேயே வைத்து விட்டு திருமணம் வந்தார். வெளியில் நின்று அம்மாவைக் கூப்பிட்டுப் பார்த்தோம். பதில் இல்லை. நேரம் போய்க்கொண்டிருக்கிறது நமக்குப் பொறுமையில்லை. என் அப்பா உடனே ஒரு கோடரி எடுத்து வந்து கடைக்கதவைப் பிளந்தார். . ஆமாம் என் தந்தை வீட்டோடு ஒரு கடை வைத்திருந்தவர். அது எனக்கும் அண்ணாக்கும் ரொம்பவே சௌகரியமாக இருந்தது ஏனெனில் நிறைய இனிப்புக்கள் இருக்கும். எடுத்துச் சாப்பிட முடியும் சிலவேளை அப்பாவின் அனுமதியோடு, சிலவேளை அவர் கண்களைக்கட்டிவிட்டு........

கடைக்கதவு மரத்தினால் செய்யப்பட்டது என்பதினால் அது இலகுவாக பிளக்க வசதியாக இருந்தது. கடைசாமான்கள் எல்லாம் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தாலும் வெளியில் இருந்து உள்ளே செல்வது கடினமாக இருந்தது.நிறைய தடைகள் போடப்பட்டிருந்தது. கடையில் பொருட்கள் வாங்க வருவோர் அனுமதியின்றி உள்ளே நுளையக்கூடாதென்பதற்காக அப்பாவின் ஏற்பாடு. எல்லாவற்றையும் நீக்கி உள்ளே சென்றார் என் அப்பா. நான் அவரைப் பின் தொடர்ந்தேன். என் அண்ணா வெளியிலே நின்றுகொண்டிருந்தார். உள்ளே மெல்லிய இருட்டு. அந்தக்காலத்தில் எமக்கு மின்சார வசதியும் இருக்கவில்லை. கடைக்குப் பின்னாலே இன்னோர் சிறு அறை. அந்த அறையில் தான் கடையின் மிச்ச மிகுதிப்பொருட்களை வைப்பார் என் அப்பா. உள்ளே நுளைந்தோம் அங்கே நாம் கண்ட கோலம்... யாரும் காணக்கூடாத கோலம்... அதைக்கண்ட என் அப்பா "ஐயோ அம்மா" என அலறினார். எப்படிப்பார்த்தேன் என் அம்மாவை!!! சின்ன மேசை ஒன்று அவர் முன்னே தள்ளப் பட்டிருந்தது பின்னாடி அவர் சேலையில் (முன்பு எனக்கு அந்தச் சேலையின் நிறம் கூட ஞாபகத்தில் இருந்துச்சு ஆனால் இப்பொழுது அது மறைந்து விட்டது). அவங்க கால்கள் தரையைத்தொடவில்லை. அம்மாவின் கழுத்துக்கும் அந்த அறையின் உட்கூரைப் பகுதிக்கும் ஒரு தொடர்பு......அது ஓர் கயிறு....... என் அம்மா தூக்கில்.....கழுத்து கயிற்றால் நெரிக்கப்பட்டு....வேணாம்ங்க தொடர்ந்து சொல்ல முடியல....அப்பா கதறிக்கொண்டே இருந்தாரு. எனக்கு அழுகை வந்திச்சு என் அம்மாவைப் பார்த்தல்ல, என் அப்பாவில் கண்ணீரைப்பார்த்து. இந்தக் குணம் எனக்கு இப்பவும் இருக்கு யாராச்சும் அழுவதைப்பார்த்தால் நானும் ஆரம்பிச்சுடுவேன்! அந்த வயதில் விபரங்கள் குறைவாய் இருந்ததினால் எனக்கு நடப்பவை புரியவில்லை.

பின்பு எல்லோரும் வருகிறார்கள்...பக்கத்து வீட்டினர், உறவுகள் என்று பலர்.....என்னென்னமோ நடந்தது புரியவில்லை...ஏதோ எல்லாம் பேசினார்கள் எனக்குப் புரியவில்லை. ஏனோ அழுதார்கள் விளங்கவில்லை...என் அம்மாவைப் பெத்தவர்களின் வலியைச் சொல்லவா முடியும்!!!! அன்றிலிருந்து எத்தனையோ மாற்றங்கள்.... சந்தேகங்கள்....கேள்விகள்... . நான் சிறுவயதில் அம்மா எங்கே போயிருக்காங்க என்று கேட்டால், "சாமி"கிட்ட என்று பதில் வந்திருக்கிறது அதனாலோ என்னமோ இப்பொழுது கண்களுக்குத்தெரியாத கடவுள்களைப் பிடிப்பதில்லை. அதற்குப் பிறகு என் வீட்டில் இருந்த ஒரு முருகன் படத்தைப் பார்த்துக்கூட உள்ளுக்குள் பயந்திருக்கேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். அழகான உருவத்தை பார்த்து பயந்திருக்கேனென்று;(கடவுள்களின் உருவப்படம் மீது ஏனோ பிரியம் பொதுவாக அவற்றை அழகாக வரைந்திருப்பாங்க). இதில் இன்னொரு விஷயம் என்னென்றால் என் அம்மா இறந்த காரணத்தை இது வரையில் யாரும் அறிந்ததில்லை.எவருக்கும் தெரியவில்லை. இன்று கூட என் பாட்டி(அம்மாவின் அம்மா ) என் அம்மாவுக்காக கண்ணீர் சிந்தாத நாள் இல்லை. எத்தனை சொந்தங்கள் என் அம்மாவின் நிழலில் இருநக்கையில் எது அவரைதூண்டியது இந்த முடிவு எடுக்க ?பதில் இல்லாத வினாக்கள் இன்னும் நம் மனதில்!!! சிறு காலத்துக்கு முன் என் பாட்டியிடம் தெரிந்து கொண்ட ஒன்று: என் அம்மா இறக்க முன்னாடி எழுதிய கடிததில் இப்படி இருந்ததாம்"பிள்ளைகளை கவனமாகப் பார்க்கவும்"

நான் யாரிடமும் எதுவும் தற்சமயம் கேட்க விரும்பவில்லை!!! காலங்கள் மாறி..... காயங்கள் மாறி.... மனிதர்கள் மாறியிருக்கும் இந்தநிலையில் எதையும் ஞாபகப் படுத்தி புண்படுத்த விரும்பவில்லை.

நண்பர்களே இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளக் காரணம் இருக்கிறது!

வாழ்கை ரொம்ப சுலபமானதே அதை ஏன் இப்படிச் சிலர் சீரழித்துக் கடினமாக்குகிறார்கள்! தேவையின்றி குழப்பங்கள்.... பின் ஆயிரம் கேள்விகள்; வேண்டாமே .........

சில சமயங்களில் உள்மனதால் என் அம்மாவைத் திட்டியிருப்பேன்....சில தருணங்களில் நன்றி சொல்லியிருக்கேன்.இப்போ நான் உங்களோடு பேசுவது கூட ஒருவகையில் என் அம்மாவின் இந்த முடிவினால் தான்.

அம்மா! உன்னால் இன்று இங்கே.....

அதை விடுவோம்!!! வாழ்வை அணு அணுவாய் ரசிப்போம்! rolleyes.gif
அன்னையர் தினத்தை நான் கேட்டுக்கிறது ஒன்றே ஒன்றுதான்(எனக்கும் சேர்த்தே)

உலகத்தில் உள்ள அனைத்து தாயையும் நேசிப்போம்!!! ஏன் குழந்தைகளைக் கூட(அவர்கள் தரும் அன்பு கூட எதோ ஒருவகையில் தாய்ப்பாசமே smile.gif )

இதோடு இந்தப் பதிவேட்டை முடிக்கிறேன். சந்திப்போமா அனைவரும் சந்திப்போமா ?...... biggrin.gif

-உங்கள் அன்பு (இணையத்) தோழி
தயா

காத்திருந்தது கனவாய்...


பதில் தெரியாக் கேள்விகளும்
பகலில் கண்ட கனவுகளும்
சொல்லாமுடியா ஏக்கங்களும்
சூழ்ந்தே இருக்கும் கவிதையுமாய்
கண் தெரிந்த குருடி நான்
கால் கடுக்கக் காத்திருந்தேன்
-காலத்தின் வேகத்தை மறந்தே

கவிதையின் பிடிவாதம்


உன்னை விரும்பியபோது எனக்குள் பூத்த முதல் கவிதை
உன்னையே மறக்க நினைக்கும் போது நீங்க மறுக்கின்றதே ஏன் ?