samedi 17 mars 2007

உயிருக்குள் உறைந்தது


உயிருக்குள் உறைந்தது எழுந்து வழியுதே
உனைதனைப் பார்த்ததும் எழுதச் சொல்லுதே
சிறு சிறு கணத்திலும் வாழ்க்கை இனிக்குதே
சிறகில்லா மனம் கூட வானைத்தாண்டுதே

தொலைவினில் பார்த்ததும் என் முகம் மலர்ந்தது
தொல்லைகள் துயரங்கள் எங்கோ தொலைந்தது
விழிகளில் இமையோ இசையாய் துடிக்குது
வித விதமாய் பல கனவுகள் பிறக்குது

உதடுகள் என்றும் உன் பெயர் சொல்லுதே
உறக்கத்தில் கூட உன்னை அழைக்குதே
குறுகுறுப்பார்வைகள் என்னுயிர் கொல்லுதே
கூட்டத்தில் உன்னை என் மனம் தேடுதே

உன் குரல் கேட்கையில் உயிரில் ராகங்கள்
உன்னுடல் தீண்டலில் உருகும் பாடல்கள்
உன்னெதிரே வருகையில் உலகம் என் கையில்
உருவம் இல்லா இந்த உணர்வுதான் என்னவோ ?